சீமானின் எதிர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல ; ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கும் அமீர்.!
இத்தனை ஆண்டுகாலம் இந்த மண்ணில் திராவிடத்தின் பெயரால் பிற மொழியாளர்களும், திரைத்துறை சார்ந்த நடிகர்களும் - நடிகைகளும் ஆட்சி செய்தது போதும். எங்கள் மண்ணுக்கு தொடர்பில்லாதவர்களிடம் ஆட்சி - அதிகாரத்தினை கையளித்ததன் விளைவாகத்தான் தமிழகம் இன்று எண்ணற்ற இன்னல்களில் சிக்கித்தவிக்கிறது. கூப்பிடு தூரத்தில் எம் தமிழினம் கொன்றொழிக்கப்பட்டபோதும் நாங்கள் கையாலாகாதவர்களாகி நின்றோம். இனியும் இங்கே பிற மொழியாளர்களின், திரைக்கவர்ச்சியை கொண்டு ஆட்சியை பிடிக்க முயலும் நடிகர்களின் ஆட்சி அமைந்திட விடமாட்டோம் என தெரிவித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பிற மொழியாளர்கள் இங்கே எங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழலாம் ; ஆனால், எங்களின் தார்மீக உரிமையாம் தலைமையேற்கும் அதிகாரத்தினை எவருக்கும் விட்டுத்தர முடியாது என அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கு காட்டமான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகையை தொடர்ச்சியாக சீமான் எதிர்த்துவருவது குறித்து சீமானின் நண்பரும், திரைப்பட இயக்குனருமான அமீரிடத்தில் கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், "அரசியலில் பங்கேற்பது என்பது அனைவருக்குமான ஜனநாயக உரிமை. அத்தகைய உரிமையை பறிக்கும் வகையில் பொதுவெளியில் ஒருவருக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏற்க முடியாதது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிறிது காலத்திற்கு முன்னர் நடிகர் ரஜினியின் திரைப்பட விழா ஒன்றில் நீங்கள் விரைவாக அரசியலுக்கு வர வேண்டுமென ரஜினிக்கு அமீர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment