ஊமைகளைப் பேசவைத்த உன்னத தலைவர்.. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள்.!
ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயராலும்,
மதத்தின் பெயராலும் மனிதர்களுக்கான அடிப்படை
உரிமைகளைக் கூட இழந்து அடிமாட்டு விலங்குகளைப் போல பொதுவியல் சமூகத்தினால்
நடத்தப்பட்டு வந்த ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாக இந்த மண்ணில் நடைபோட
வைத்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்த நாள் இன்று.
இதோ நாகரீகம் வளர்ந்துவிட்டதாக நாம்
மார்தட்டிக்கொள்கிற இந்த சமயத்திலும், சாதி
ஆணவப்படுகொலைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்க
சாதி வெறியர்களின் தாக்குதல்களும் இந்த தேசத்தில்
நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், மத ரீதியிலான நம்பிக்கைகளும் - சாதிய கட்டுமானத்தின் இறுக்கமும்
ஊடுருவிப்போய் கிடந்த அன்றைய சமூகத்தில் சிறு மழலையாய் இந்த மண்ணில்
பிறப்பெடுத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
14 ஏப்ரல் 1891 அன்று அன்றைய பிரித்தானிய இந்தியாவில் மாவ் (Mhow) எனுமிடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14 வது குழந்தையாகப் பிறந்த அம்பேத்கரையும் விட்டுவைக்கவில்லை
சமூகத்தில் இப்போதும் ஓய்ந்திடாமல் வீசிக்கொண்டிருக்கும் சாதியெனும் விஷக்காற்று.
ஆம், அம்பேத்கரும் சாதிக்கொடுமைகளால்
பாதிக்கப்பட்டார். ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என
கடவாமல் சாதி எனும் கொடுமைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார்.
அம்பேத்கர் பெறாத பட்டங்கள் இல்லை,
தொடாத உச்சங்கள் இல்லை. உலகநாடுகளின் அவையான
ஐ.நாவில் அண்ணலின் 125வது பிறந்த நாள் கோலாகலமாக
அனுசரிக்கப்பட்டது என்றால் அம்பேத்கரின் கொள்கைவழி செயற்பாடுகளையும், சாதனைகளையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
இதோ அண்ணலின் பிறந்த நாளை நாம்
அனுசரித்துக்கொண்டிருக்கிற வேளையில் தான் சாதிய - மத ரீதியிலான தாக்குதல்கள்
அதிகரித்துக்கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுகின்றன அரசின் சார்பில் வெளியிடப்படும்
புள்ளி விவரங்கள்.. ஆம், ஓரளவேனும் மட்டுப்பட்டிருந்த சாதிய -
மத உணர்வுகளை கிளப்பி ஆதாமடைய துடித்துக்கொண்டிருக்கின்றன இந்துத்துவ சக்திகள்.
இத்தகைய நேரத்தில், அம்பேத்கரிய - சனநாயக சக்திகள் யாவும் ஒன்றிணைந்து சாதிய - மத ஆதிக்க
சக்திகளை வேரறுப்பதுவே நாம் அண்ணலுக்கு செலுத்துகிற உண்மையான நன்றியாகும்.. ஜெய்
பீம்!

Comments
Post a Comment