பெண்மையெனும் பெருவெளிச்சத்தின் விரல் பற்றி.. மங்கையர் தின வாழ்த்துக்கள்.!
இன்று (08-03-2018) உலகம் முழுவதும் 'மகளிர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. கருவில் குழந்தையை தூக்கிச் சுமப்பது முதல்,
காற்றில் கலந்துபோவது வரையில் தம் வாழ்வினை
தம்மைச் சார்ந்தோருக்காய் ஈகம் செய்து, அவர்களின்
மகிழ்ச்சியில் தாமும் சேர்ந்து மகிழ்கிற, பிள்ளைகள்
பசியாற தம் பசி மறக்கிற பெண்களின் ஈகத்தினையும், பெண்மையின் மகத்துவத்தினையும் அனைவருக்கும் உணர்த்துவதற்காகவே உலக
மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா என்றான் தமிழ்ப் பழங்கவிஞன் ஒருவன்.. ஆம் எத்தனை சாத்தியமான
வார்த்தைகள் இவை. பெண்களின் பெருமையையும், மகத்துவத்தினையும்
பறைசாற்றிடவே நாம் வணங்குகிற கடவுள்களுக்கும், நம் தாகம் தீர்த்து உயிர்வளர்க்கிற நீர் ஆதாரங்களுக்கும் பெண்களின்
பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றால் அதில் மிகையேதுமில்லை.
குடும்ப கட்டமைவுகளை தூக்கிச்சுமப்பது
பெண்கள் என்பது எத்துணை உண்மையோ அதே அளவு உண்மை இந்த சமூக கட்டமைவினையும்
பெண்கள்தான் தூக்கிச்சுமக்கிறார்கள் என்பது. பிறருக்காக தம் கனவுகளை, லட்சியங்களை சமரசம் செய்துகொள்ளும் பெண்களே, சரியான வாய்ப்புகளும் - உற்சாகப்படுத்தும் உறவுகளும் கிடைத்தால்
பெரிய அளவில் சாதிக்கவும் செய்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் பலப்பல.
அப்படியான பெண்மையின் பெருமையை போற்றிட நாம் மகளிர்
தினத்தை கொண்டாடினாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும்,
வன்முறைச்சம்பவங்களும் குறைந்தபாடில்லை.
நம்மைப் போன்ற சக மனுஷி.. நம் தாயைப்
போல இவள் ஒருத்தி என எப்போது நாம் எதிர்ப்படும் பெண்களுக்கு மதிப்பளிக்கிறோமோ
அப்போதுதான் பெண்களின் மகத்துவத்தை நாம் உணர்ந்ததாய் அர்த்தம்.
இனிய மங்கையர் தின வாழ்த்துக்கள்..

Comments
Post a Comment