எங்கள் தங்கை அனிதாவின் பிறந்த நாள் இன்று.. காற்றில் கலைந்துபோகாத ஓவியம் அவள்.!
ஆம்.. காற்றில் கலைந்துபோகாத ஓவியம்
அவள்
மருத்துவராகும் கனவினை
காதலைப் போல் நெஞ்சில் சுமந்தவளும்
அவள்..
மூட்டை தூக்கும் தகப்பனுக்கு
பிறந்திட்ட ஏழைச் செல்வம் அவள்..
ஏழைக்குடியில் பிறந்தாலும்
எங்கள் அனிதா
எப்போதும் சறுக்கியதில்லை
கல்வியில்..
ஆயிரத்தில் கட்டணம் கட்டி
சிறப்பு வகுப்புக்கு சென்றவள் இல்லை
ஆயினும் கல்வியில் யாருக்கும்
சளைத்தவளில்லை..
பல தலைமுறை துயர்களை
கல்வியால் மட்டுமே கடந்துவிட முடியுமென
நம்பியவள் அவள்..
மழலை குணம் மாறிடதா அவளையும்
மாய்த்துப்போட வந்தது நீட் எனும் பேரரக்கன்..
மாநில அரசின் பாடத்திட்டத்தில்
இல்லாமல்
எங்களுக்கு எதற்கடா மத்திய
பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு..
பள்ளி இறுதி வகுப்பில்
போதிய மதிப்பெண்கள் இருந்தும் ;
ஆட்சியாளர்களின் அறிவுப் போதாமையால்
பறிபோயிருக்கிறது எங்கள் அனிதாவின்
பிஞ்சு உயிர்..
கல்வியையும், மருத்துவத்தினையும்
தனியார் மயமாக்கிவிட்டீர் ; அதற்கு காவு கொடுக்கிறீர்கள்
எங்களைப் போன்ற எளியோர்களை..
எளியோர்கள்களின் துயர் அறிந்திடாத
மத்திய அரசு ;
யாருக்காக ஆள்கிறோம் என்றே தெரிந்திடாத
மாநில அரசு
இரண்டும் கூட்டு சேர்ந்து நிகழ்த்தி
விட்டன
அப்பட்டமானதோர் படுகொலையை..
எந்தன் மகள் அனிதா
நிச்சயம் மருத்துவராவார் ;
எம்மைப்போன்ற ஏழைகளுக்கு
இலவசமாய் மருத்துவம் பார்ப்பார்
என மகிழ்ந்திருந்த
தகப்பனின் கனவு இன்று கானல் நீராகவே ஆகிப்போனது..
ஆம், இனி அனிதா
உயிர்ப்பெறுதல் சாத்தியம் இல்லை ;
ஆனாலும், அவள் போன்ற பிள்ளைகள்
யாரும் இனி கல்விக்காக உயிர் துறக்க
கூடாது..
வாக்களிப்பதோடு கடமை நம்
முடிந்துபோனதென
இருந்துவிடாமல்
நீட் போன்ற திணிப்புகளை
வலுவாய் எதிர்க்க அணியமாவோம்..
எப்போதும் நம்மோடு இருப்பார்
நம்
தங்கை அனிதா..!


Comments
Post a Comment