சமூகத்தை காக்க வந்த இரட்சகர்களா.. நடிகர்கள் ; சிறப்பு கட்டுரை.!
கட்டுரையாளர் : இரா.இளம்பரிதி தமிழ்
தமிழக அரசியலும் - நடிகர்களும் :
தமிழகத்தின் அரசியல் வரலாறு நெடுகிலும் பின்னிப்பிணைந்து உள்ளது திரையுலகம் என்றால் அதில் மிகையேதுமில்லை. அதற்கான உதாரணங்கள் என நாம் குறிப்பிட நினைத்தோமானால் திராவிட இயக்க பிதாமகர் அண்ணா துவங்கி கலைஞர், ஜெயலலிதா வரை முட்டுமல்ல தற்போது அரசியல் கால் பதிக்க எத்தனிக்கும் புதிய நடிகர்கள் வரை நாம் குறிப்பிடலாம்.
அட.. இதெல்லாம் தெரிந்தது தானே.. இப்போது ஏன் இவையெல்லாம் என கேட்கிறீர்களா. அதற்கான காரணங்கள் என்னிடம் இல்லாமல் இல்லை. இதோ, நாம் இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிற வேளையில் வெகு காலமாக புலி வருது.. என்ற கதையாக நீண்டுகொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகையை அவரே உறுதிப்படுத்தி, மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
ரஜினியும் - கமலும்:
இன்னோர் புறமோ, திரையுலகில் தான் ரஜினிக்கு போட்டி நாயகனாக விளங்கிக்கொண்டிருந்த கமல் தானும் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்து இன்று தனது கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார்.
ஆக, தமிழகத்து உச்ச திரை நட்சத்திரங்கள் இருவர் அரசியல் களம் காண தயாராகிவிட்டனர். அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க ஊடகங்களும், அவர்கள் பின்னே அணி திரள ஓர் தொண்டர் படையும் தயாராகிவிட்டது.
நல்லோர்களை கவனிக்க மறுக்கிறோம் :
இங்கே நாம் நுட்பமாக கவனிக்க வேண்டியது. திரையில் நாயகனாக நடித்தவர்களுக்காக அணி திரளும் நீங்கள் சிறு வயது முதலே தங்களது சொந்த வாழ்வினை தொலைத்து ஏழை - எளியோர்களுக்காக களமாடி வருகிற தோழர்.நல்லகண்ணு போன்றவர்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் எழுந்து நிற்கிற திருமா போன்றவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தினை அளிக்க மறுக்கிறீர்கள் என்பதனை நினைக்கும் போது நிச்சயம் மனது ஓர் நொடி கனத்து போகிறது.
நடிகர்களின் அரசியல் வருகையை விமர்சிப்பதுவல்ல நம் நோக்கம். அரசியலில் கால் பதிக்க எத்தனிப்பவர்கள் ராஜாவாக இருக்கலாம், கோவணாண்டியாக இருக்கலாம் ஆனால், எதற்காக நாம் அரசியலில் ஈடுபடுகிறோம், யாருக்காக செயலாற்ற போகிறோம் என்பதனை தெளிவாக உணர்ந்து, அதற்கான பாதைகளை வகுத்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி களத்தில் இறங்கினால் மட்டுமே காலத்தால் அவர்களின் செயற்பாடுகள் பரிசீலிக்கப்படும். அதை விடுத்தது, நாற்காலி நோக்கம் கொண்டு, சினிமா பிரபல்யத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு நீங்கள் தேர்தல் பயணம் போவீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு வரலாற்றில் இடமிருக்கும் - தோற்றுபோனவர்கள் என்ற வரிசையில்.
யாருடைய குரலாக :
அரசியலில் கால் பதிக்க எல்லோருக்கும் உரிமை உண்டுதான். ஆனால், நீங்கள் யாருடைய குரலாக ஒலிக்கப்போகிறீர்கள் என்பதனைப் பொறுத்தே உங்கள் கொள்கைகளும், கோட்பாடுகளும் அமைந்திடும், வரலாற்றில் நீங்கள் கொண்டாடப்போவதோ, தூற்றப்படப்போவதோ நிகழ்ந்திடும். ஆக, புரிதல் ஏதுமின்றி வெறும் சினிமா கவர்ச்சி என்பதனைக் கொண்டு களத்தில் இறங்கினால் மூக்குடைபட்டு போகக்கூடுமென்பதற்கு சாட்சிகளும், உதாரணங்களுமே ஏராளம் உள்ளன.
விழித்துக்கொள்ளவேண்டியது யார் :
தமிழர் தம் வாழ்வாதார பிரச்சனைகளான காவிரி, கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்டவை குறித்து தற்போது அரசியல் கட்சி துவங்க உள்ள பார்வை என்னவாக உள்ளது, மாநில சுயாட்சி குறித்தும், சகோதரி அனிதாவின் உயிரை பறித்த நீட் போன்ற விவகாரங்கள் குறித்தும் அவர்களின் பார்வை என்னவாக உள்ளது.. மேலும் சாதீயம், மதவாதம், பெண்கள் உரிமை, பொருளாதாரம், விவசாயம், மருத்துவம், கல்வி உள்ளிட்டவை குறித்து என்பதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், வெறும் நடிகர்கள் என்ற காரணத்திற்காய் அவர்கள் பின்னால் அணி திரள்வது என்பது ஆபத்திலும் ஆபத்தானது. ஆக, இங்கே விழித்துக்கொள்ள வேண்டியது சமூகமும் - மக்களும் தான்.




Comments
Post a Comment